வன்ம குடோனாக மாறிய சுந்தர் சி!


சுந்தர் சி, கோலிவுட்டில் விதிவிலக்கான இயக்குநர்களில் ஒருவர். சுந்தர் சியின் பெயரை கேட்டாலே முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, தலைநகரம், வின்னர் போன்ற படங்கள்தான் நினைவில் வரும். எந்த மாதிரியான மன அழுத்தத்தில் இருந்தாலும் சுந்தர் சியின் மேற்கூறிய படங்கள் பார்த்தால் ஆறுதல் நிச்சயம். அதனாதான் சுமார் 30 ஆண்டுகளாக கமர்சியல் இயக்குநராக வலம் வருகிறார்.     

அதே நினைப்பில்தான் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா, யோகி பாபு நடிக்கும் ‘புருஷன்’ என்ற படத்தின் டைட்டில் டீசரை தற்போது பார்த்தேன். சுந்தர் சி போன்ற இயக்குநர்கள் இவ்வளவு கேவலமான வன்ம குடோனாக மாறிவருவது அதிர்ச்சியளிக்கிறது. லோகேஷ் கனகராஜ், நெல்சன், அருண் மாதேஸ்வரன் வகையறாக்களுக்கே டஃப் கொடுத்துவிடுவார் போல!. டீசரை பார்த்து முடிப்பதற்குள் அப்படியொரு ஆத்திரமும் ரத்த கொதிப்பும் வந்துவிட்டது.   

சமீபத்தில் ரஜினியின் படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வந்தபோது, உண்மையாகவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தர் சி - சூப்பர் ஸ்டார் கூட்டணியில் தரமான காமெடி படம் வரப்போகிறது என எதிர்பார்க்க வைத்தது. அதேபோல், அந்தப் படத்தில் இருந்து சுந்தர் சி விலகியபோது, “அட ச்சே ஒரு நல்ல காமெடி படம் மிஸ்ஸாயிடுச்சே” என வருத்தமாக இருந்தது. ஆனால், புருஷன் பட டைட்டில் டீசரை பார்த்ததும் சுந்தர் சி-க்கு கையெடுத்து கும்பிட வேண்டும்போல ஆகிவிட்டது. 

சமையலறையில் உள்ள அத்தனை கூர்மையான பொருட்களையும் எடுத்து, அவரை தாக்க வரும் சக மனிதர்களை குத்திக் கிழிக்கிறார் விஷால். சில காட்சிகளை இங்கே விவரிக்க முடியவில்லை; விரல்கள் அந்தளவுக்கு தடுமாறுகிறது. ஆனால், நீங்க மட்டும் எப்படி சார் (சுந்தர் சி) இந்த மாதிரி காட்சிகளையெல்லாம் கொஞ்சம்கூட யோசிக்காமல் படமாக்க முடிகிறது. அந்தளவுக்கு நீங்களும் மனப்பிறழ்வுக்கு ஆளாகிவிட்டீர்களா என்ன?.

உங்கள் படத்துக்கான ஆடியன்ஸ் யாரென்று உங்களுக்குத் தெரியாதா?. திரும்பிய பக்கமெல்லாம் ரத்தம் பீறிடும் வன்மப் படங்களாக வரும்போது, உங்களைப் போன்ற இயக்குநர்கள்தான் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தீர்கள். இப்போது நீங்களுமா?. “அடி கொடுத்த கைப்புள்ளக்கே இந்த நிலமைன்னா? அடி வாங்குனவன் உசுரோட இருப்பான்னு நினைக்குற” என்ற வின்னர் பட வசனம்தான் நினைவில் வருகிறது. டைட்டில் டீசரிலேயே இப்படியொரு வன்ம வெறியாட்டம் என்றால், முழுபடமும் என்ன லட்சணத்தில் இருக்கும்?. 

தியேட்டர் ஸ்க்ரீனின் எதிரில் அமரப் போகும் குழந்தைகளை ஒருகணம் நினைத்துப் பார்த்தீர்களா மிஸ்டர் வன்ம குடோன். அவர்களின் கண்களையும் விஷாலின் கையில் இருந்த கத்தியால் குத்திக் கிழிக்கப் போகிறீர்களா? அந்த குருதியில்தான், ஒரே வாரத்தில் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் என தம்பட்டம் அடித்து போஸ்டர் ஒட்டப் போகிறீர்களா?. தமிழ்நாடே வன்முறை களமாக மாறிவிட்டதாக கூச்சலிடும் உங்கள் மனைவி குஷ்புவுக்கு, அருமை புருஷரான நீங்கள், இந்த புருஷன் பட டைட்டில் டீசரை 3டி தொழில்நுட்பத்தில் போட்டுக் காட்டுமாறு மிகத் தாழ்மையுடனும் காட்டமாகவும் கேட்டுக் கொள்கிறேன். 

”சுந்தர் சி-யின் புருஷன்; மிக மிக அகோரமானவன்”

Kalandhai Abdul Rahman
Thank you facebook post 

#SundarC #vishal #TamannaahBhatia #purushan #violation #violenceawareness #movie #tamilcinema #toxic

கருத்துரையிடுக

0 கருத்துகள்