' உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! '
ஐம்பது ஆண்டுகளைக் கண்டுவிட்ட அரவிந்த் கண் மருத்துவமனையின் சேவையைப் பற்றி அறியாதவர் இல்லை.
திருநெல்வேலி அரவிந்த் 37 ஆண்டுகளைக் கடந்து விட்டது!
எத்தனை இலட்சம் ஏழை எளிய மக்களுடைய பார்வையை கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் மீட்டுத் தந்திருக்கிறது! எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு!
சாலையில் இருந்து பொருநையாற்றின் மேற்குக் கரையில் பெரும் பள்ளத்தில் காடாகக் கிடந்த இடத்தில் இன்று உயர்ந்து நிற்கிறது!
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் அங்கு செல்லாதவர்கள் அறியாத ஒரு விஷயம் அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் இருக்கிறது!
மருத்துமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கும் உடன் வருபவர்களுக்குமான ஒரு உணவு விடுதிதான் அது!
தரமான உணவு வகைகளை மிகவும் சுத்தமாகத் தொடர்ந்து வழங்குவதில் எங்கேனும் ஒரு தவறு நேரலாம். ஆனால் நான் 15 ஆண்டுகளாக அவ்வப்போது போகும்போதெல்லாம் அந்த உணவைச் சாப்பிட்டு வந்திருக்கிறேன்!
அன்று ரூ 40 .
சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ 50.
தற்போது ரூ 60!
ஒரு கூட்டு, பொரியல் அல்லது கீரை, ஊறுகாய், சாம்பார், ரசம், மோர் அப்பளம்.
வயிற்றுக்கு எந்தவிதத்திலும் கேடு விளைவிக்காத ஓர் அருமையான மதிய உணவை நீங்கள் நெல்லையில் இவ்வளவு மலிவாகப் பெறவே முடியாது.
நூறு ரூபாய்க்கு மேல் விலையுள்ள சைவ உணவகங்களில் சில அயிட்டம் கூடுதலாக இருக்கலாம். பாயாசம் என்ற பெயரில் ஒரு கிண்ணத்தில் ஏதோவொன்றை வைத்துப் போவார்கள். பலரும் பதறிப் போய் எடுத்த எடுப்பிலேயே பாயாசத்தை வயிற்றுக்குள் நேராகச் செலுத்தி ஆயாசம் தீர்வார்கள். அதன் பின்னர் வைத்த சோற்றையும் கறி வகைகளையும் மிச்சம் வைக்காமல் நீங்கள் எழுந்துபோக முடியாது! ஆனால் இந்த அரவிந்த் கேண்டீன் உணவையும் கறிவகைகளையும் முழுமையாக காலி செய்த பின்னரே எழுந்து செல்வீர்கள்!
முன்பு நண்பர் ஒருவரின் சிகிச்சைக்காக உடன் வந்தேன்.
அவர் அசைவப் பிரியர். மேலும் என்னைப் பலமாக உபசரிக்கக் கருதி பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.
அவரை இங்கே சாப்பிடுவோம் என்று அழைத்து வந்தேன்.
சாப்பிட்ட பிறகு அவர் தனது பெரிய வயிற்றைத் தடவிக் கொண்டு மிகப் பெரிய திருப்தியுடன் " இங்கே இப்படி இருக்கிறது தெரியாமலே நான் வெளியே போய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்" என்று என்னிடம் சொன்னார்!
அசைவம் இல்லாமல் அவர் ஒரு நாள் கழிவது வல்லிய பிரயாசம்! மட்டன்+ சிக்கன்+ மீன்+ கருவாடு+ மாசி+ முட்டை என்று ஏதாவது அவருடைய மதிய உணவில் இருக்கும்!
அப்படிப்பட்ட நபர் உடல் தளர்ந்த நிலையில் இந்த எளிய உணவை ரசித்துச் சாப்பிட்டார்!
சில மருத்துவ மனைகளில் உள்ள சாப்பாடு நோயாளிகளுக்கானது. எல்லோருக்குமானதும் சில இடங்களில் கிடைக்கும் என்றாலும் எனது அனுபவத்தில் நெல்லை அரவிந்த் முதல் இடத்தைப் பெறுகிறது.
இத்தனைக்கும் இந்த உணவு விடுதியை ஒப்பந்ததாரர் மூலமாகத்தான் நடத்துகிறார்கள்.
ஆனால் சுவையிலோ தரத்திலோ எந்த மாற்றமும் இல்லாமல் விலையையும் குறைவாக நிர்ணயித்து இத்தனை ஆண்டுகளாகதொடர்ந்து நடத்துவதென்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
செல்ஃப் சர்வீஸ்தான்!
தண்ணீர் தருவதற்கு மட்டும் பணியாளர்கள் உள்ளனர். குழம்பு, ரசம், மோர் மேலும் தேவைப்பட்டால் அவர்களிடம் கேட்டால் கொண்டு வந்து தருவார்கள்.
அங்கு பணியாற்றும் மருத்துவர்களும் இந்த உணவைத்தான் சாப்பிடுகிறார்கள் என்பதை வைத்தே இதன் தகுதியை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
குறை என்று சொல்ல வேண்டுமானால் மோரில் நீரின் பங்கு அதிகம் மிகவும் அதிகம்!
எனக்குக் காளமேகப் புலவருடைய பாடல் நினைவுக்கு வந்தது! ( ஆரம்பிச்சிட்டான்யா!)
மோர் விற்கும் இடையர் குலப் பெண் ஒருத்தி கொண்டு வந்த மோர் பச்சத்தண்ணியாக இருப்பதைக் கண்ட காளமேகம்,
" அட மோரே!
நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைப் பெற்றிருந்தாய்!
நிலத்திற்கு வந்த போது நீர் என்ற பெயரைப் பெற்றிருந்தாய்!
மார்பில் கச்சணிந்த இடையர் குலப் பெண்களுடைய கைகளுக்கு வந்த பின்னர் ' மோர்' என்ற பெயரைப் பெற்று விட்டாய்!
இப்படியாகத்தானே ( ஒரேயொரு பொருளுக்கு) மூன்று பெயரைப் பெற்று விட்டாய்! ( எல்லாம் மோர் விற்பவளின் கைங்கர்யம்!)
" கார் என்று பேர் படைத்தாய் ககனத்து உறும்போது;
நீர் என்று பேர் படைத்தாய் நீள் நிலத்தில் வந்ததன் பின் ;
வார் ஒன்று மென்முலையார் ஆச்சியர் கை வந்ததன் பின்,
மோர் என்று பேர் படைத்தாய் முப் பேரும் பெற்றாயே!'
அவ்வளவுதான்!
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! '
அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் அமரர் கோவிந்தப்பா வேங்கடசாமி அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
0 கருத்துகள்